கவுஹாத்தி : அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதி கனமழை பெய்துவருகிறது. இந்த மழைக்கு மாநிலத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 1.33 லட்சம் மக்கள் மழை வெள்ளத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க 74 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பிஸ்வாநாத், போங்கைகான், சிராங், தேமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், லக்கிம்பூர், மஜூலி, சிவசாகர், சோனித்பூர் மற்றும் டின்சுகியா ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
போங்கைகான் பகுதியில் மட்டும் 63 ஆயிரத்து 891 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக தேமாஜி நகரில் 31 ஆயிரத்து 500 பேரும், மஜூலி பகுதியில் 13 ஆயிரத்து 239 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர பக்ஸா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், கோல்பரா, கச்சார், ஜோர்ஹட், கோக்ராஜர், மஜூலி, மோரிகான், நல்பாரி, சோனித்பூர் மற்றும் டின்சுகியா உள்ளிட்ட இடங்களில் கடும் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க : அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு