கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு பரப்புரையில் ஈடுபட்டார். பாலக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "கடந்த பல ஆண்டுகளாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடது ஜனநாயக முன்னணி ஆகியவை நட்பு ரீதியாக மேற்கொண்டுள்ள ஒப்பந்தமே கேரள அரசியலின் மோசமான ரகசியம்.
தற்போது, இவர்கள் பேசி வைத்துக்கொண்டு அரசியல் செய்வது குறித்து கேரளாவின் முதல்முறை வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதல் ஐந்தாண்டுகள் ஒருவரும் அடுத்த ஐந்தாண்டுகள் வேறோருவரும் கொள்ளையடிக்கின்றனர். பணம் சேர்க்க இருவரும் தங்களுக்கான தனித்துவமான வழியை மேற்கொள்கின்றனர். சூரியனின் ஒளியைகூட ஐக்கிய ஜனநாயக முன்னணி விட்டுவைக்கவில்லை.
வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதருக்கு யூதாஸ் எப்படி துரோகம் இழைத்தாரோ அதேபோல் தங்கக் கட்டிகளுக்காக இடது ஜனநாயகக் கூட்டணி கேரள மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது" என்றார்.