ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் க்ரால்போராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த மஜித் அன்சாரி (35)-சோஹானா கதூன்(30) தம்பதி அவர்களது மகன்கள் ஃபைசான் (4), அபு ஸார் (3), ரசித் (1) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் க்ரால்போராவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் மஜித் அன்சாரி மயக்கமடைந்த நிலையில் வீட்டின் வெளியே கிடந்துள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளூர் மருத்துவரை அழைத்து பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மனைவி மற்றும் மகன்கள் 3 பேரும் உயிரிழந்து கிடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் உடல்களை மீட்டோம்.
முதல்கட்ட தகவலில் 5 பேரும் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் நிலக்கரி அடுப்பில் இருந்து கார்பன் மோனாக்சைட் வெளியேறிதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், உடற்கூராய்வின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின்பே உண்மை தெரியவரும் எனத்தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: நூலிழையில் தப்பிய இளைஞன்.. நொடிப் பொழுதில் நடந்த விபத்து..