ஜலந்தர் (பஞ்சாப்): பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் நேற்று (ஆக். 08) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த வீட்டின் உரிமையாளர் யஷ்பால் கய், பாஜக பிரமுகர் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் யஷ்பாலின் மருமகள் ருச்சி, ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த பாஜக தலைவர் அசோக் சரீன் ஹிக்கி, “வீட்டில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டு கம்பரசர் வெடித்ததில் வீட்டில் வேகமாக தீ பரவி உள்ளது.
தீ வேகமாகப் பரவியதால் யஷ்பால் கய் மற்றும் அவரது குடும்பத்தாரால் வெளியேறி தப்பிக்க முடியவில்லை. யஷ்பாலின் மகனின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில், ஜலந்தரைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்பி சுஷில் ரிங்குவும் சம்பவ இடத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைக்கர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!