உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே கிராசிங் ஒன்றை கடக்க முயன்ற டிரக், பைக் மீது அவ்வழியே வந்த லக்னோ-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(ஏப்.22) அதிகாலை 5 மணியளவில், கத்ரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் தான் இவ்விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், ரயில் வரும் போது பணியில் இருந்த ரயில்வே ஊழியர் கேட்டை சரியான நேரத்தில் அடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வாகனங்கள் இருப்பதை அறிந்ததும் அவசர கால பிரேக்கை ரயில் ஓட்டுநர் முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், இக்கோர விபத்தைத் தடுக்க முடியவில்லை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஐவரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், டிரக்கில் பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மீதமுள்ள ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருகிறது. விபத்து நடந்த இடத்தில் சேதமடைந்து கிடக்கும் வாகனங்களை, ரயில்வே துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் படுகாயம்