கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏடிஎம் பண நிரப்பும் நிறுவனத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர்கள் ஷவுகத் அலி, ஷாகர் அகமத், குல்சமான், முஷ்தாக் ஹுசைன், முகமது ஜாவேத் ஆகியோர் பாதுகாவலராக பணியாற்றி வந்தனர்.
இவர்கள், மகாராஷ்டிராவிலுள்ள ஒரு ஏஜென்சி மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேரளா வந்து பணியாற்றுகின்றனர்.
உரிமம் இல்லாத துப்பாக்கி
இந்நிலையில், நேற்று ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த பாதுகாவலர்கள் இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த துப்பாக்கி வைத்திருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை.
மேலும், இதற்கான உரிமங்கள் மகாராஷ்டிராவிலுள்ள அலுவலகத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையடுத்து, அங்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிகிறது. இதையடுத்து, இளைஞர்கள் வைத்திருந்த ஐந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து மகாராஷ்டிராவிலுள்ள ஆள்சேர்ப்பு நிறுவனத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மூவர் கைது