வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர், தட்டாஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி. இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், நண்பர்கள் ஏழு பேருடன் தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய பின், அனைவரும் ஆறும், கடலும் இணையும் கழிமுகப்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது எழுந்த பேரலை பாலாஜி, புவியரசன் ஆகியோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பினர். உடனே அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து, கடலுக்குள் மாயமான 2 மாணவர்களையும் தேடினர். இதில் உயிருடன் மீட்கப்பட்ட பாலாஜிக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாயமான மாணவர் புவியரசனை தேடும் பணி உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று மாணவர் கடலில் மூழ்கி மாயமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை: ஒருவர் கைது