மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மும்பை ஐஐடியில் முதலாம் ஆண்டு பி.டெக் கெமிக்கல் படித்து வந்த தர்ஷன் சோலங்கி (18) என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவனை, முதலில் விடுதி காவலர் பார்த்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவரது உடலில் ரத்தம் இருந்ததாகவும் விடுதி காவலர் கூறி உள்ளார். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தங்கி இருந்த அறையை காவல் துறையினர் சோதனை செய்தனர். அங்கு தற்கொலைக்கு தொடர்புடைய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே இதனை ஒரு விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளதாக மூத்த காவல் ஆய்வாளர் புதான் சவந்த் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த மாணவர் கல்லூரியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகத்திடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சித்தேரி அருகே கட்டட தொழிலாளி உருட்டு கட்டையால் அடித்துக் கொலை