நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் (Memorial Sloan Kettering Cancer Center) மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு 'டோஸ்டர்லிமாப்' (Dostarlimab) எனும் மருந்தை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கொடுத்து வந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் அனைவருக்கும் புற்றுநோய் பூரண குணமடைந்தது தெரியவந்தது.
இதனை எண்டோஸ்கோபி, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மருத்துவர் லூயிஸ் ஏ டயஸ் ஜே, மருத்துவ உலகில் முதன்முறையாக இது நடந்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், " 'டோஸ்டர்லிமாப்' மருந்து மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படுகிறது. இந்த மருந்து மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து மூன்று வாரங்கள் கொடுக்கப்பட்டது. பரிசோதனையில் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல முடிவு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அதிக பரிசோதனை தேவை:இந்த சிசிச்சைக்குப் முன்னர் புற்றுநோயைக் குணப்படுத்த அவர்கள் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்கள். டோஸ்டர்லிமாப் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்தனர். மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை என்ற நிலைக்கு வந்தனர். நோயாளிகளை இந்த பரிசோதனைக்கு உட்படுத்திய போது 18 பேருக்கும் புற்றுநோய் சற்று ஆபத்தான நிலையில் தான் இருந்தது. பின்னர் சிசிக்சையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது" என்றார்.
தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. தற்போது சிறிய எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்தான் மருந்து பொதுவெளி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தனர்.
புற்றுநோயிலிருந்து குணமடைந்த நோயாளிகள் கண்ணீர்விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்று மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண்ணுக்கு 'செயற்கை' பிறப்புறுப்பு, கருப்பை: அரசு மருத்துவர்கள் சாதனை!