கரோனா பாதிப்புகளைத் தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று (மே.1) ஹைதராபாத் வந்தடைகிறது. ஏற்கனவே கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், மூன்றாவதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வருகிறது.
கரோனாவை தடுப்பதில் 91.6 விழுக்காடு அளவுக்கு இந்தத் தடுப்பூசி திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்தத் தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.