ஹைதராபாத்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பாஜகவின் முதுபெரும் தலைவர் சண்டுபட்லா ஜங்கா ரெட்டி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இவர் 1935 நவம்பர் 18ஆம் தேதியன்று வாரங்கல் மாவட்டத்தில் பிறந்தார். சண்டுபட்லா 1953ஆம் ஆண்டு சுதேஷ்னா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் ஹனுமகொண்டாவில் வசித்துவந்தார்.
ஆசிரியர் டு அரசியல்
1984இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவில் இரண்டு பேர் மட்டுமே வெற்றிபெற்றனர். அதில் ஒருவர்தான் சண்டுபட்லா ஜங்கா ரெட்டி. ஹனுமகொண்டா மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, நரசிம்ம ராவைவிட (முன்னாள் பிரதமர்) 54 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றார் என்பது இதில் கூடுதல் விஷேசம்.
மக்களவையில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஒரே பாஜக வேட்பாளரும் இவர்தான். 1984இல் நடந்த தேர்தலில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வாஜ்பாய், அத்வானிகூட தோல்வியைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டுபட்லா ஜங்கா ரெட்டி அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் பார்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 1967-72 காலகட்டத்தில் இருந்தார்.
மக்களின் இதயங்களில் ஜங்கா
அப்போது, அவர் பாஜகவின் முன்வடிவமான ஜனசங்கம் கட்சியில் இருந்தார். பின்னர், 1983-84 காலகட்டத்தில் பாஜக சார்பில் சாம்பெட்டா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர் 1984இல் எட்டாவது மக்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜங்கா ரெட்டியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டில், "ஜனசங்கத்தையும், பாஜகவையும் புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல ஒருங்கிணைந்த முயற்சிகளை ஜங்கா ரெட்டி மேற்கொண்டார்.
ஜங்கா ரெட்டி தனது வாழ்க்கையைப் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்தார். பலதரப்பட்ட மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இடம்பிடித்தவர் ஜங்கா. கட்சியினருக்கு இவர் உந்துசக்தியாக இருந்தவர். அவரது மரணம் வேதனையை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
- கட்சிக்காக அவரது உறுதியான நிலைப்பாடு குறித்து நினைவுகூர்ந்து நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மற்றொரு ட்வீட்டில், "பாஜக மிகுந்த நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில் கட்சிக்காக உறுதியாக நின்று குரல் கொடுத்தவர் ஜங்கா ரெட்டி. அவரது மகனுடன் பேசினேன், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன், ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜர் சிலை இன்று திறப்பு!