உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் பல்கலைக்கழகம் அருகே நேற்று (டிச.28) இரவு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் லாரியின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை வந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த ஒட்டுநர், சாலையோரமாக கண்டெய்னர் லாரியை நிறுத்தினார். கீழே இறங்குவதற்குள் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மளமளவென பற்றிய தீ லாரி முழுவதும் பரவியது. பின்னர் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிவதைக் கண்டு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கண்டெய்னர் லாரியில் சில இருசக்கர வாகனம், கார்கள், வீட்டுப் பொருட்கள் இருந்தன. தீ விபத்தில் லாரியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி நகர் மதன் சிங் கூறுகையில், 'நேற்றிரவு 11.30 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்று தீப்பிடித்தாக, எங்களுக்குத் தகவல் கிடைத்தது. முதலில் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றோம்.
ஆனால் தீ லாரி முழுவதும் மளமளவெனப் பரவியதால், மேலும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது' என்றார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.