புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், பிள்ளையார்குப்பம் எம்ஜிஆர் நகர் பகுதியில் பிளாஸ்டிக் உள்பட பழைய பொருட்களின் சேமிப்புக் கிடங்கு வைத்துள்ளார்.
இந்த குடோனில் உள்ள பொருள்களில் நேற்றிரவு(ஏப்.26) திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென எரிந்த தீ, அங்கிருந்த பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட பொருட்களில் பரவியதில் குடோன் முழுவதும் நெருப்பும், புகையுமாக காட்சியளித்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வில்லியனூர், சேதராப்பட்டு பகுதியிலிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். விபத்தில் குடோனில் இருந்த மொத்த பொருள்களும் தீயில் கருகின.