டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) நண்பகல் வேளையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல் வெளியானது.
நாட்டில் கரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல் நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும்; விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வயதான நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை(டிச.24ஆம் தேதி) சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து நேற்று (டிசம்பர் 25ஆம் தேதி) பா.ஜ.க. மூத்த தலைவர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: Bodh Mahotsav: கரோனா பரவலுக்கு மத்தியில் பீகாருக்கு படையெடுக்கும் 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள்