டெல்லி: வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நடப்பாண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடைசியாக முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படும்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு சாதகமாக பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுத் துறைகள் அனுப்பிய பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பண வீக்கம் அதிகரிப்பு காரணமாக மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி பட்டியலில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது வருமான வரி விலக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், 2019ஆம் ஆண்டு நிலையான விலக்கு தொகை 50ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நிபுணர்கள் குழு இந்த தொகையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பரிந்துரைத்து உள்ளதால் அதில் மாற்றம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
இதனால் நடுத்தர மக்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வரும் 31ஆம் தேதி பண வீக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாக உள்ள நிலையில், அதை அனுசரித்துச் செல்லும் வகையில் ஜனவரி தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
பட்ஜெட் ஆவணங்கள் அச்சாவதற்கு முந்தைய சம்பிரதாய நிகழ்வான அல்வா கிண்டும் நிகழ்ச்சி, டெல்லி மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள நார்த் பிளாக் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆண்டும் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை நடப்பாண்டிலும், தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடுத்தர வர்க்கத்தின் அழுத்தங்கள் மற்றும் பிரச்னைகளை அறிந்து இருப்பதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து பேசுகையில், "நானும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள் தான். அதனால் நடுத்தர வர்க்கத்தின் அழுத்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நடுத்தர வர்க்கத்தினருடன் நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன்" என்றார்.
நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் வகையில் பட்ஜெட்டில் புதிதாக எந்த வரிகளும் விதிக்கப்படப்போவதில்லை என்று கூறினார். 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம், 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
விலக்கு வரம்புகள் மற்றும் நிலையான விலக்குகள் தவிர, ஆயுள் காப்பீடு, நிலையான வைப்பு நிதி, பத்திரங்கள், வீட்டுவசதி மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி, போன்றவற்றில் முதலீடுகளை உள்ளடக்கிய 80C-யின் கீழ் வரம்பை அதிகரிக்கும் வாய்ப்பையும் நிதி அமைச்சகம் கவனித்து வருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: உலகின் முதல் மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து - இந்தியாவில் அறிமுகம்.!