தோகா: கத்தாரில் 22ஆவது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் கிளைமாக்சை நோக்கி தொடர் நகர்ந்து வருகிறது. அல் பெய்த் மைதானத்தில் நடந்த கடைசி கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. நாக் சுற்றுகளில் இங்கிலாந்து அணி தடுமாறும் என்பது இந்த ஆட்டத்திலும் நிரூபணமானது.
ஆட்டம் தொடங்கிய 17ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அருலியன் சூவாமெனி(Aurelien Tchouameni) கோல் அடித்து அணியின் வெற்றிக் கணக்கை தொடங்கி வைத்தார். 2ஆவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் பதில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் கொண்டு வந்தார்.
இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சித்தனர். 78ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவுட் கோல் அடித்து இங்கிலாந்து ரசிகர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்தார். ஆட்டம் முடியும் வரை பதில் கோல் அடிக்க இங்கிலாந்து வீரர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இறுதியில் 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. மைதானத்தில் கூடியிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். முதல் முறையாக பிபா உலக கோப்பை நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்த மொராக்கோ அணியை, பிரான்ஸ் அரையிறுதியில் எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ.. அரையிறுதிக்குள் நுழைந்த மொராக்கோ..