பெங்களூரு: ‘வாரிசு அரசியல்’ என்பது அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளானாலும், தவிர்க்க முடியாததாகிவிட்டது. அனைத்து பெரும்பான்மை கட்சியின் வாரிசுகளும் தற்போது அரசியலில் உள்ளனர். தற்போது இந்தியாவில் திமுக, காங்கிரஸ், பாஜக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா என பல மாநிலங்களில் இருக்கும் அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது.
கடந்த ஆண்டு பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும், பாஜக வாரிசு அரசியலுக்கு எதிரானது, மேலும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி அப்பா - மகன் ஆட்சி எனவும் எதிர்கட்சிகளை குறிவைத்து பாஜக பல விமர்சனங்களை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து, குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என தெலுங்கானா பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா கூறியிருந்தார்.
ஆனால் அதை கேட்டு கொந்தளித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி யாருடையா கட்சியில் குடும்ப ஆட்சி இல்லை பாஜகாவிலா? என கேள்வியை எழுப்பினார். பின்னர், கர்நாடகாவில் உள்ள குடும்ப அரசியலில் உள்ள 16 பேர் கொண்ட பாஜக வாரிசு பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டு, பாஜகவும் குடும்ப சங்கிலித் தொடர்தான் எனக் கூறினார்.
மேலும் தற்பொது நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் தந்தையும் - மகனும், தந்தையும் - மகளும் என இணைந்து பல இடங்களில் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ள வாரிசு அரசியலும், அவர்களின் விவரங்கள் குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் பட்டியலில் மூத்த காங்கிரஸ் தலைவர் சாமனுரு சிவசங்கரப்பா முக்கியமானவர் என்றே கூறலாம்.
பெங்களூரில் உள்ள தாவணகெரே தெற்குத் தொகுதியில் சாமனுருவும், அவரது மகன் மல்லிகார்ஜுன் தாவணகெரே வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். மேலும், தாவணகெரே தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் அஜய்குமாரை எதிர்த்து சாமனூரு சிவசங்கரப்பா போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனை எதிர்த்து பாஜக வேட்பாளர் லோகிகெரே நாகராஜ் போட்டியிடுகிறார்.
மேலும் பெங்களூரு ஊரக - தேவனஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்பி கே.எச்.முனியப்பா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஜேடிஎஸ் (JDS) வேட்பாளர் நிசர்க நாராயண சுவாமி போட்டியிடுகிறார். இதேபோல், பாஜக சார்பில் அஸ்வினி சம்பங்கியை எதிர்த்து அவரது மகளும், சிட்டிங் எம்எல்ஏவுமான ரூப்கலா சஷிதர் போட்டியிடுகிறார்.
மேலும் காங்கிரஸ் எம் எல் ஏக்களாகிய சௌமியா ரெட்டி, ராமலிங்க ரெட்டி ஆகிய தந்தையும், மகளும் இம்முறை ஜெயநகர் மற்றும் பிடிஎம் லேஅவுட் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டனர். அதில் சௌமியா ரெட்டியை எதிர்த்து பாஜக சார்பில் பி.கே.ராமமூர்த்தியும், பிடிஎம் லேஅவுட்டில் ராமலிங்க ரெட்டியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்ரீதர ரெட்டியும் போட்டியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் செல்வாக்கு நிறைந்த வேட்பாளர்களில் ஒருவர் பிரியா கிருஷ்ணா. இவர் காங்கிரஸ் சார்பில் கோவிந்தராஜ நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் உமேஷ் ஷெட்டி போட்டியிட்டுள்ளார். மேலும், பிரியா கிருஷ்ணாவின் தந்தை எம்.கிருஷ்ணப்பாவும் அவர் போட்டியிடும் தொகுதிக்குப் பக்கத்துத் தொகுதியான விஜயநகர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிருஷ்ணப்பாவை எதிர்த்து பாஜக சார்பில் எச்.ரவீந்திரன் போட்டியிடுகிறார்.
ஜேடிஎஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சன்னபட்டானா தொகுதியிலும், அவரது தாயார் அனிதா குமாரசாமி போட்டியிட்ட ராமநகரா தொகுதியில் அவரது மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். குமாரசாமியை எதிர்த்து பாஜக சார்பில் சி.பி யோகேஷ்வர் போட்டியிட்டுள்ளார். மேலும் ராமநகரில் நிகில் குமாரசாமிக்கு எதிராக பாஜக சார்பில் கவுதம் கவுடாவும், காங்கிரஸ் சார்பில் இக்பால் உசேனும் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவேகவுடா தனது மகன் ஜி.டி.ஹரீஷ் கவுடாவை முதன்முறையாக தேர்தலில் போட்டியிட களமிறக்கியுள்ளார். தற்போது சாமுண்டேஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடா போட்டியிடுகிறார். ஜிடிடி-க்கு எதிராக பாஜகவின் கவீஷ் கவுடா நேரடிப் போட்டியிட்டார். பின்னர் ஹரிஷ் கவுடா ஹுன்சூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் ஹெச்பி மஞ்சுநாத் போட்டியிட்டார்.
மேலும், முன்னாள் முதல்வர் தர்மசிங்கின் மகன்கள் அஜய் சிங், விஜய் சிங் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வழங்கியுள்ளது. ஜெவர்கியில் இரண்டு முறை வெற்றி பெற்ற அஜய் சிங், இந்த முறை ஹாட் - ரிக் கோல் அடிக்க (மூன்றாவது முறையாக வெற்றி பெற) தயாராகி வருகிறார். மேலும் பசவகல்யாண தொகுதியில் தர்மசிங்கின் மற்றொரு மகன் விஜய் சிங்குக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் சிங் முதன்முறையாக இத்தொகுதியில் களமிறங்குகிறார். ஜேவர்கியில் அஜய் சிங்கை எதிர்த்து ஜேடிஎஸ் சார்பில் தொட்டப்ப கவுடா மற்றும் பாஜக சார்பில் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பசவகல்யாணில் விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் சரணு சலகர் போட்டியிடுகிறார். இவ்வாறு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் என தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என, குடும்பம் குடும்பமாக அரசியலில் களமிறங்கி வருகின்றனர்.