பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிர்ஹூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் தனது மகள் ஜோதியுடன் (13) பிழைப்புக்காக ஹரியானா மாநிலத்திற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்துவந்தார். இதற்கிடையில், விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த அவர் நடக்கும் சக்தியை இழந்தார். இதனால், குடும்பம் நடத்துவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சமயத்தில்தான் கடந்தாண்டு கரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
1200 கி.மீ சைக்கிள் பயணம்
பணக்கஷ்டத்தினால், குடியிருந்த வீட்டிற்கும் வாடகை கட்ட முடியாமல் போனதால், இருவரும் சொந்த ஊரான பிகாருக்கு செல்ல முடிவு செய்தனர். வீட்டுச்செலவுக்காக இருந்த 500 ரூபாயைக் கொண்டு, மிதிவண்டி ஒன்றை ஜோதி வாங்கியுள்ளார். அதில் தனது தந்தையை அமர வைத்துக்கொண்டு சுமார் 1200 கி.மீ., தூரத்தை எட்டு நாள்களில் கடந்து வீட்டை அடைந்தார். சிறுமியின் இச்செயல் சொந்த ஊரைத் தாண்டி அமெரிக்கா வரை பேசப்பட்டது.
இவாங்கா ட்ரம்ப் பாராட்டு
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், சிறுமியின் செயலை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். சைக்கிள் பயணத்தில் புதிய மைல்கல்லைப் படைத்த பிகார் சிறுமிக்கு, தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்துக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் பயிற்சி அளிக்க அவருக்கு இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதனை அச்சிறுமி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை நேற்றிரவு(மே.31) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தந்தையை இழந்து வாடும் சிறுமிக்கு, மாவட்ட நிர்வாகம் உதவி செய்திட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.