சுந்தர்கர் (ஒடிசா): கொய்டா காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட குலா கிராமத்தில் வசித்து வருபவர்கள் பாண்டு முண்டா - துபாலி முண்டா தம்பதியர். இவர்களுக்கு ஐந்து வயதில் சீமா என்ற பெண் குழந்தையும், இரண்டு வயதில் ராஜூ என்ற ஆண் குழந்தையும், மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.
பாண்டு குடித்திவிட்டு அடிக்கடி அவரது மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஏப். 30) இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாண்டு, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த பாண்டு அருகிலிருந்த கோடாரியை எடுத்து துபாலியை தாக்க முயன்றார். அப்போது அவர் தனது உயிரை காப்பாறிக்கொள்ள அந்த இடத்தைவிட்டு துபாலி தப்பிச்சென்றுவிட்டார்.
மேலும் ஆத்திரம் குறையாத பாண்டு வீட்டிலிருந்த குழந்தைகளை குடிபோதையில் சாரமாரியாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே மூன்று குழந்தைகளும் துடிதுடித்து உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தைகள் மூவரையும் அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து பாண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தைகளின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள பாண்டு முண்டாவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை போக்சோவில் கைது!