டெல்லி : தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற விவசாயிகள், போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவி விலகக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்தவீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா நேரில் சந்தித்துப் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு துணை நிற்பதாகவும்; அவர்களுக்கு வேண்டிய உதவிளை செய்து தருவதாகவும் அவர் உறுதி அளித்தார். இருப்பினும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பல்வேறு தரப்பினரை தொடர்ந்து மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் மற்றும் காப்ஸ் சமூக அமைப்புகள் களமிறங்கி உள்ளன. மே 21ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் கெடு விதித்து இருந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளதால் ஒட்டுமொத்த நாடே இந்தப் போராட்டத்தில் உற்று நோக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இரவில் மெழுகுவர்த்தியை ஏந்தி விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து கொண்டு இருக்கின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
விவசாயிகளின் தொடர் வருகையைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்தனர். ஆனால், அந்த தடுப்புகளை வீசி எறிந்த விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அதேநேரம் இந்த தகவலை டெல்லி போலீசார் மறுத்து உள்ளனர். விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை சந்திக்க அவசர அவரசமாக சென்றதாகவும்; அப்போது அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது அவர்கள் ஏறியதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை, விவசாயிகள் சந்திக்க வசதியாக குறுக்கே இருந்த தடுப்புகளை நீக்கியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாகப் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : இறையாண்மை விவகாரம்.. சோனியா காந்தி கருத்துக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!