மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றனர்.
18ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், இன்று (டிச. 14) முதல் தங்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். அதன் ஒரு பகுதியாக, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவா்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனா்.
இது குறித்து விவசாய சங்கத் தலைவா் குா்னாம் சிங் சதுனி கூறுகையில், “டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவா்கள், அவரவா் இடங்களில் இருந்தபடி இன்று (டிச. 14) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விவசாய சங்கங்கள் சாா்பில் தா்ணா போராட்டங்கள் நடத்தப்படும். அவற்றோடு விவசாயிகளின் வழக்கமான போராட்டமும் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க...மாவோயிஸ்ட் பிடியில் விவசாயிகள் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்