அமிர்தசரஸ் (பஞ்சாப்): தலைநகர் டெல்லியில் நாளை முதல் இரு நாட்கள் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கும், மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப் 8) பஞ்சாப் மாநிலத்தின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் உள்பட ஒட்டுமொத்த நாட்டிலும் உள்ள பொருளாதார வளத்தை உற்றுநோக்கும் மத்திய அரசு மற்றும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று உள்ள பிரமுகர்கள், பொருளாதார வளங்களை கைப்பற்றுவதில் வல்லுநர்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பந்தர் கூறுகையில், “இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு வெளிநாடுகளின் தலைவர்கள், நமது இந்தியத் தலைவர்கள், மத்திய அரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் பஞ்சாப்பின் 80 சதவீதப் பொருட்கள், 75 சதவீத வர்த்தகம் மற்றும் 65 சதவீத விளைநிலம் ஆகியவையும் அடங்கும்.
உலகமயமாதல், தொழில்மயமாதல், பல்வேறு நாட்டுக் குழுக்களால் உருவாக்கப்பட்டு உள்ள கொள்கைகள் ஆகியவற்றை சில கார்ப்பரேட் குழுமங்களுக்கு கொடுத்து, மாநிலங்களின் உரிமை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுமக்களின் உரிமையை சீர்குலைக்கும் செயலை நாங்கள் அனைத்து விதத்தில் இருந்தும் கண்டிக்கிறோம்.
இது முற்றிலும் ஒழுக்கம் அற்ற செயல். மக்களின் வளங்களை கைப்பற்றி வருவதால், பல நாடுகள் மக்களை அடிமையாகவே வைத்து உள்ளது. ஆனால், அவர்கள் இதனை பஞ்சாப்பில் நிகழ்த்துவதற்கு அனுமதி இல்லை” என தெரிவித்தார். மேலும், கோல்டு கேட் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும், நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்தியா தலைமை தாங்கும் இந்த மாநாட்டிற்காக தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வந்தடைந்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே, ஜி20 மாநாட்டின் முடிவில் உலகளாவிய தெற்கின் குரல் பிரதிபலிக்கும் என ஜி20 அமைப்பின் இந்தியக் குழு தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகளாவிய தெற்கின் குரலை ஜி20 மாநாடு பிரதிபலிக்கும் - அமிதாப் காந்த்