குருகிராம்: விவசாயிகள் பிரச்னையை வாக்குகளுக்காக அரசியலாக்கினால், அது நம் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஹர்யான்வி விவசாய தலைவர் சோட்டு ராமின் வாழ்வும் எழுத்தும் தொகுப்பு வெளியீட்டில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, விவசாயம் தான் நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. மற்ற துறைகள் வீழ்ச்சி கண்டபோதிலும், இரண்டு ஆண்டுகளாக விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்த வண்ணம் உள்ளன. அனைத்து அரசுகளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டும். விவசாயிகளும் அரசும் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், விவசாயிகள் பிரச்னையை வாக்குகளுக்காக அரசியலாக்கினால், அது நம் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும். அரசியல் தளத்தில்தான் அரசியல் நிகழ வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை உண்டு. ஆனால், புதிய திட்டங்களை வரவேற்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்க வேண்டும். நாடு முழுக்க ஒரே சந்தை ஏன் இருக்கக் கூடாது. ஆந்திரா அரிசியை தமிழ்நாட்டில் விற்கக்கூடாது என்பது அபத்தமானது. மொத்த நாடும் ஒரே உணவு மண்டலம்தான்; அதற்கு தடை இருக்கக் கூடாது. அதேசமயம் விவசாயிகளின் வருமானமும் முக்கியம் என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் பதவியேற்பு