புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக இடுப்பு வலி காரணமாக விவசாயி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை கண்டித்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (60). இவர் மூன்று நாட்களுக்கு முன்பு இடுப்பு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரத்தத்தின் அளவு குறைந்துள்ளதாகவும், உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் எனவும் உறவினர்களுக்கு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உறவினர்கள் நேற்று காலை ரத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அவருக்கு உடல்நிலை மோசமாகியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் ராமலிங்கம் உயிரிழந்த செய்தியை அவரது உறவினர்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் அவர் எப்படி இறந்தார் என மருத்துவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து தான் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததும், அதனால் தான் ரத்தத்தின் அளவு குறைந்ததையும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததையும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட உறவினர்கள் கடும் கோபத்தில் மருத்துவமனையை முற்றுகையிட்டு, வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பிறகு மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததாக தெரிவித்ததால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் அலட்சியப் போக்கினாலேயே அவர் உயரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஜேடர்பாளையம் அருகே 2,000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு..! போலீசார் தீவிர விசாரணை