பெங்களூரு: பெங்களூரில் உள்ள மூன்று அருங்காட்சியகங்களுக்கு இ-மெயில் வாயிலாக போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, தற்போது விஜயபூரில் உள்ள புகழ்பெற்ற கோல் கும்பாஸ் அருங்காட்சியகத்திற்கும் இ-மெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தற்போது பெங்களூரு மத்தியப் பிரிவின் மூன்று காவல் நிலையங்களில், தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய பிரிவு டி.ஜி.பி சேகர் தெரிவித்துள்ளார். மேலும், தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், நேற்று (ஜன.05) கப்பன் பார்க் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்ப அருங்காட்சியகம், விதன சவுதா காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நவீன தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு மர்ம நபர்களால் இ-மெயில் மூலம், போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வெடிகுண்டு சோதனைப் படை, மோப்ப நாய் படை உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டது போன்று வெடிகுண்டு எங்கும் இல்லை. இதையடுத்துதான், அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மத்திய பிரிவு டி.ஜி.பி சேகர் கூறுகையில், “போலி வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயில் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் 'Morgue999lol' என்ற இ-மெயில் ஐடியில் இருந்து அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இதேபோல், இந்தியாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் மூலம் வந்துள்ளது. இந்நிலையில், தற்போது விஜயபூரில் உள்ள கோல் கும்பாஸ் அருங்காட்சியகத்திற்கு (Gol Gumbaz Museum) வந்துள்ள இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, விஜயப்பூர் மாவட்ட எஸ்.பி ரிஷிகேஷ் சோனவனே கூறுகையில், "புகழ்பெற்ற கோல் கும்பாஸ் அருங்காட்சியகத்திற்கு வந்துள்ள போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, ஏற்கனவே என்.சி (Non cognizable offence) பதிவு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை முழுவதுமாக பார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்க வைத்த ஆசாமி கைது.. நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்!