டெல்லி: நொய்டாவில் அமைந்துள்ள இரட்டைக் கோபுர கட்டடங்கள் சட்டத்திற்குப் புறம்பாக பல விதிமீறல்களுடன் கட்டப்பட்டதால், அதனை இடிப்பதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையொட்டி நேற்று நொய்டாவிற்கு பலத்த பாதுகாப்புடன் 325 கிலோ வெடி மருந்து கொண்டு வரப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்த கட்டடம் இடிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்க வல்லுநர்கள் குழுவிற்கு மொத்தம் 3,700 கிலோ வெடிமருந்து தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
’’நொய்டா ஆணையத்தின் கீழ் இதற்கான வேலை நடக்க வேண்டும் என காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த கோபுரங்களை இடிக்க நொய்டா ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பல்வாலில் இருந்து சூப்பர்டெக் இரட்டையர் கோபுரத்திற்கு வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டன. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி கட்டடம் இடிக்கப்படும்.
நொய்டா ஆணையத்தின் தலைமையில் முழுமையான இடிப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என போலீஸார் தெரிவித்தனர். மேலும் கட்டடங்களின் சுமார் 9,400 துளைகள் துளையிடப்பட்டு அதில் வெடிமருந்து பொருத்தப்பட உள்ளது. இம்முறை, 14 நாட்களில், குண்டுவெடிப்புக்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரட்டைக்கோபுரத்தை இடிக்கும்போது வானிலை தொடர்பான பிரச்னை இருந்தால் செப்டம்பர் 4ஆம் தேதி அன்று இடிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நொய்டா இரட்டைக் கோபுரங்களை இடிக்க ஒருவார கால அவகாசம்