கின்னௌர் (இமாச்சலப் பிரதேசம்): பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசித்த இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நெகி நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டியளித்தார்.
அதில், “இந்தியாவின் வாக்காளராக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் என எதையும் தவிர்த்ததில்லை. இது என் நாடு. இங்கு நேர்மைக்கும், துடிப்பான போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னௌரைச் சேர்ந்த நெகி, 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி பிறந்தார். அவருக்கு தற்போது 102 வயது ஆகிறது. சுதந்திர இந்தியாவில் 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தலில் தனது முதல் வாக்கைப் பதிவு செய்தவர் இவர்தான்.
102 வயதிலும் ஜனநாயகக் கடமையாற்றும் தாத்தா!
அதாவது, சுதந்திரம் அடைந்த பிறகு நாடு முழுவதும் 1952ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் மட்டும் 5 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியராக பணியாற்றிய நெகி, வாக்குச்சாவடி பணியிலும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று காலை 7 மணிக்கே தனது வாக்கை பதிவு செய்தார். அவருக்கு முன்பு யாரும் அங்கு வாக்குப்பதிவு செய்திருக்கவில்லை. இதனால் அவரே, நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார். இவர் ‘சனம் ரே’ எனும் இந்தி திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது உடல்நிலை மோசமடைந்து வரும் இவருக்கு மாநில அரசின் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.