லக்னோ : உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் உடல்நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நரம்பியல், இருதயவியல், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். கல்யாண் சிங்குக்கு கடந்த இரு வாரங்களாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) மாலை 5.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “கல்யாண் சிங் மருத்துவமனை வந்தபோது அவருக்கு இரத்த கொதிப்பு மற்றும் இதய துடிப்பு சீராக இருந்தது. எனினும் அவரது உணர்வு நிலை குறைந்து காணப்பட்டது. அவரது வயது மூப்பு மற்றும் ஏற்கனவே அவருக்குள்ள நோய்களை கருத்தில் கொண்டு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம்” என்றார்.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் சுவாதந்ரா தேவ் சிங் ஆகியோர் மருத்துவமனை சென்று கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க : அயோத்தி ராமர் கோயில்- என் கனவு நிறைவேறியது- கல்யாண் சிங்