மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பலர் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருஷரன் கவுர் ஆகியோருக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் அரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு, அவர் வீடு திரும்பினார்.
அதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்ற நோய்களால் பாதிப்படைந்த 45 வயதுக்கு மேற்பட்டோரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 52 வயதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்என்ஜேபி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கடந்த பத்தாண்டுகளாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.