டெல்லி: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்கக்கோரி, பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது என்றும், இலவசங்களால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்மனுதாரராக சேர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தன. இந்த வழக்கு இன்று(ஆக.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி. ரமணா, "இலவசங்கள் வழங்குவதில் பிரச்னை இருக்கிறது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்றால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியுமா?
மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என மத்திய அரசு சட்டம் இயற்றுவதாக வைத்துக்கொள்வோம். அந்த சட்டம் ஆய்வுக்குரியது அல்ல என்று கூற முடியுமா? நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களில் கொள்கை முடிவு என்ற பெயரில் அறிவிக்கப்படும் இலவசங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால், இதில் நீண்ட விவாதம் தேவை. அதனால்தான், இந்த விவகாரத்தில் ஆணையம் அமைக்கலாம் என்று நினைக்கிறோம். இந்த ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு, மக்களின் நலனுக்கு ஏற்றார்போல் பரிந்துரைகளை வழங்கும்.
கிராமங்களில் வீடுகள், கால்நடைகள் வழங்குவது, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது போன்றவை மக்கள் நலத்திட்டங்களாகவே பார்க்கப்படுகிறது. இவற்றை இலவசங்கள் என்று மட்டும் கூறிவிட முடியாது. இலவசங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தமது தரப்பு வாதத்தை வைக்க முன்வந்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'இந்த வழக்கில் திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். இதில் பல விஷயங்கள் குறித்துப்பேச வேண்டியுள்ளது. பேசாமல் தவிர்ப்பதால் அவற்றைப் பற்றி நீதிமன்றத்திற்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்' என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் நாளையும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:இலவசங்களால் முன்னேறியுள்ளோம்... உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்