திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணங்களைக் கலைத்துவிட, இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் கண்டனத்தை தெரிவித்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியுடன், இலங்கை அரசு செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்திற்கு எதிராக, இலங்கை அரசு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களை கலைக்க முடிவுசெய்திருப்பது, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஆணவத்தையும், அலட்சியத்தையும் காட்டும், துரதிர்ஷ்டமான முடிவாகும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையில் பதவியேற்றது முதலாகவே, ஈழத்தமிழர்களின் எஞ்சியுள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், தமிழர்களின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும், பாஜக தலைமையிலான இந்திய அரசு, இதற்கான தீர்வினைப்பற்றி எந்த முடிவையும் எடுக்காதது ஏன் என்று டி.ஆர். பாலு அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் டி.ஆர். பாலுவின் கடிதத்திற்கு கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று விரிவான பதிலை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்திற்கான அம்மக்களின் எதிர்பார்ப்புகளைப் பாதுகாக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இலங்கை அரசை தொடர்ந்து, இந்திய அரசு வலியுறுத்திவருகின்றது.
இலங்கை அரசால் உறுதியளிக்கப்பட்ட, பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பரவலை உறுதிசெய்வதும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும், இலங்கை அரசின் நலன்களைப் பாதுகாக்க உதவும் என எனது சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.