அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தன் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என முன்னர் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 7) அமராவதி நகரின் வெலகபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், ஒட்டுமொத்த அமைச்சர்களும் (24 பேர்) தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர்.
புதிய அமைச்சர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட உள்ள புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. பழைய அமைச்சரவையில் 19 பேர் நீக்கப்பட்டு அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
புதிய அமைச்சர்களின் இறுதிப்பட்டியலை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரனிடம் முதலமைச்சர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் புதிய அமைச்சரவையில் ஐந்து துணை முதலமைச்சர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
அவர்கள் பழங்குடியின, பட்டியலின, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திலிருந்து இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆந்திர மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 2024ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. 2024இல் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே நிறைவு