மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (44). இவரது தாய் சுதரத்தனம்மா (73). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் காலமானதால், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தனிமையில் இருக்கும் தாயை கவனிக்க முடிவு செய்தார் கிருஷ்ண குமார். மேலும், தாம் பார்த்து வந்த பொறியாளர் வேலையை விட்டு விட்டு, தாயை பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு அழைத்து செல்லவும் அவர் விரும்பினார்.
அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பொறியாளர் வேலையை கிருஷ்ண குமார் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தாயுடன், ஆன்மிக தலங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். 20 ஆண்டுகளாக கிருஷ்ண குமாரின் தந்தை பயன்படுத்தி வந்த "பஜாஜ்" ஸ்கூட்டரில் தாய் மற்றும் மகன் யாத்திரைக்கு புறப்பட்டனர்.
முதற்கட்டமாக நேபாளம், மியான்மர், பூடான் ஆகிய நாடுகளில் உள்ள புண்ணிய தலங்களுக்கு தாயும், மகனும் சென்று வழிபட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் ஸ்கூட்டரிலேயே சென்றனர். ஜம்மு-காஷ்மீர், திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 8) தெலங்கானா மாநிலம் பாலமுருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்துக்கு வந்தடைந்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், "2018ம் ஆண்டு தொடங்கிய எங்கள் ஆன்மிக பயணத்தில் 65,025 கிலோ மீட்டர் தூரத்தை பூர்த்தி செய்துள்ளோம். இந்த பயணத்தில் வெறும் கோயில்களை மட்டும் எனது தாய்க்கு காண்பிக்கவில்லை. வெவ்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் கலாசாரம், மரபு, வரலாறு, மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை எனது தாய் அறிந்துள்ளார். இந்த பயணம் அவருக்கு மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
தாய், தந்தையர் மறைந்த பிறகு அவர்களது புகைப்படத்துக்கு மரியாதை செய்வதை விட, அவர்கள் உயிருடன் இருக்கும் போதே பேணி பராமரிப்பது சிறந்தது என்பதை நம்புகிறேன். வயதான காலத்தில் பெற்றோரை கவனிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு மகனும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரமாவது தனக்கு தாய்க்காக செலவிட வேண்டும்" எனக் கூறினார்.
கிருஷ்ண குமாரின் இந்த பயணத்தை கடந்த 2019ம் ஆண்டே தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி இருந்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், "தாய்-மகனின் பாசப்பிணைப்பை பார்த்து மகிழ்கிறேன். என்னை கிருஷ்ண குமார் நேரில் சந்தித்தால் அவருக்கு காரை பரிசாக அளிப்பேன். அடுத்த யாத்திரைக்கு அவர் தனது தாயுடன் காரில் செல்லலாம்'' எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகளை நேரடியாக சாடி சர்ச்சையில் சிக்கிய "உருட்டு உருட்டு" பாடல்!