புதுச்சேரி: ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 2) 3 ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில், 280-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரிழந்து 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளில் மாநில மற்றும் தேசிய மீட்பு படைகள், பேரிடர் மீட்பு படைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். நேற்று காலை வரை இரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பயணிகளாக சிக்கிய தமிழர்களின் நிலைபாடு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. பின்னர், தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசாவிற்கு நேரில் சென்று தமிழர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு அவர்களை மீட்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று (ஜூன் 3) சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தினால் சுமார் 280- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது” என தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். படுகாயம் அடைந்து சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த அவசரகால மையம் 24 மணிநேரமும் இயங்கும்” கட்டணமில்லா எண்கள் : 1070, 1077, 112 தொலைபேசி எண்கள்: 0413-2251003, 2255996 என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை (ஜூன் 4) இந்த விபத்திலிருந்து மீட்கப்பட்டவா்கள் விமானம் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதில், முதல்கட்டமாக புவனேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (ஜூன் 3) காலை 8.40 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 190 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். அதில் 133 பயணிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் சென்னை வந்தடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Odisha Train accident: விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பயணியின் பதைபதைக்கும் அனுபவம்!