உத்தரப் பிரதேசம் (கான்பூர்): உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நேற்று (ஜன.30) ஞாயிற்றுக்கிழமை டாட் மில் குறுக்கு சாலைக்கு அருகே மின்சாரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாகச் சென்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து கிழக்கு கான்பூர் துணை காவல் ஆணையர் பிரமோத் குமார் கூறுகையில், "பேருந்து ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார், அவரைத் தேடி வருகிறோம். பேருந்து விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதுடன் மூன்று கார்கள், பல இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், "கான்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு - மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்