டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தேர்தல் ஆணையம் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு கட்சிகளுக்கு சில நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றி ஊர்வலம், கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படாது.
வெற்றி பெற்ற வேட்பாளருடன் வெற்றிச் சான்றிதழ் பெற இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்ற சான்றிதழைப் பெறவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக மாறியதற்கு தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பு, தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் பதிவு செய்தாலும் தவறில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின் கட்சியினர் அதிகளவு கூடி மீண்டும் தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் இந்த உத்தரவினை முன்னெச்சரிக்கையாகப் பிறப்பித்துள்ளது.