பரபங்கி : உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த பேரனின் சடலத்தை 5 நாட்கள் சுத்தம் செய்து புது ஆடை அணிவித்து மூதாட்டி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி. இவரும் 17 வயதான பிரியன்சு என்ற பேரன் வசித்து வந்து உள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து துர்நாற்றம் வீசிய நிலையில், இது குறித்து அக்கம் பக்கத்து மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து வீட்டின் கதவை திறக்குமாறு கோரியுள்ளனர். மூதாட்டி மறுக்கவே போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இறுதியாக மூதாட்டி வீட்டின் கதவை திறந்த நிலையில், உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியாக பிரியன்சு உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து உள்ளனர்.
அழுகிய நிலையில் கிடந்த பிரியன்சுவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரியன்சுவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பெற்றோரை இழந்த பிரியன்சு, தன் பாட்டியுடன் வசித்து வந்து உள்ளார். பாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் பிரியன்சு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த பேரனின் சடலத்தை நாள்தோறும் சுத்தம் செய்து வந்த மூதாட்டி, புது ஆடைகளை மாற்றி வந்து உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து லேசான துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், நாட்கள் செல்லச் செல்ல மிக அருவறுப்பான வாசனை வீசத் தொடங்கியதாக அக்கம் பக்கத்து மக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக மூதாட்டியும் வெளியே வராததால் போலீசாருக்கு அக்கம் பக்கத்து மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : அடுத்த டார்கெட் தெலங்கானா... கட்டம் கட்டி வீழ்த்த துடிக்கும் காங்கிரஸ்... வீழ்வாரா கே.சி.ஆர்!