மும்பை: முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப் பேரவையில் இன்று (ஜூலை 4) நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 287 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் ஏக்நாத் ஷிண்டே 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஜூன் 29ஆம் தேதி கவிழ்ந்தது. இதற்கு காரணமாகயிருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், பாஜக அணியுடன் இணைந்து ஜூன் 30ஆம் தேதி ஆட்சியை பிடித்தனர்.
அந்த வகையில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டப் பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.
இறுதியாக சட்டப் பேரவையில் 4ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி இன்று (ஜூலை 4) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே வென்று, ஆட்சியை தக்கவைத்தார்.
இதையும் படிங்க: 'வீழ்ச்சியடையும் கட்சிகளிடமிருந்து பாடம் கற்க வேண்டும்' - பிரதமர் மோடி