டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணத்தின் தொடக்கமாக அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “ சோனியா காந்தி என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு ராகுல் காந்தியும் இருந்தார். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. இந்த சந்திப்பின் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.
நான் தலைவர் இல்லை. நான் ஒரு சாதாரணத் தொண்டர் மட்டும் தான். நான் தெருவில் இருக்கும் ஒரு சாமான்யன். பாஜகவை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.
மொத்தமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மக்கள் பிரச்னைகள் இங்கு பேசப்பட வேண்டும். டீக்கடைகளில் மக்கள் பிரச்னைகளை பேச முடியாது. அதை நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும்" என்று கூறினார்.