ஹைதராபாத்: தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது. உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,18,500 பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களில் 1,42,000 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக வளரும் நாடுகளில் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 67,000 பேருக்கு புதிதாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் 48,000-க்கும் மேற்பட்டோர் ஆண்கள், 19,000-க்கும் மேற்பட்டோர் பெண்கள். இதில் 63,000 பேர் இறக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம். உலகளவில் நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அனைத்து வகையான புற்றுநோய்களாலும் ஏற்படும் மொத்த இறப்புகளில் 18.2 சதவீதம் என தெரிகிறது.
அதே நேரத்தில், தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 6,79,421 ஆண்களும், 7,12,758 பெண்களும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பொதுவாக புகைப்பிடித்தல், காற்று மாசு போன்றவற்றால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் காற்றுமாசை விட, புகைப்பிடித்தலே நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம். புகைப்பிடிப்பது அல்லது புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அதிகம் சுவாசிப்பதால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
பரம்பரை காரணமாகவும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிகிறது. இவை தவிர, கதிர்வீச்சு உள்ளிட்ட சிக்கலான மருத்துவ சிகிச்சைகள், உடல் பருமன் போன்றவையும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை கண்டறிவது கடினம் என்றாலும், அதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கினால், உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
தொடர் இருமல், மூச்சு விடுவதில் சிரமம், குரலில் மாற்றம், நெஞ்சுவலி, வயிற்று வலி, எடை குறைதல், தலைவலி உள்ளிட்டவை நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு தென்பட்டாலும், சாதாரண மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு காணப்பட்டாலும், மருத்துவ பரிசோதனை செய்வது முக்கியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் 68 ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், சுமார் 45% நோயாளிகள் இந்த நோயை பாதிப்பை நான்காவது கட்டத்தில்தான் கண்டறிகிறார்கள். 10-15% நோயாளிகள் மட்டுமே நோயின் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நோய் தாக்கம் குறித்து அறியும்போது, புற்றுநோய் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
அதனால், நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தன்மை குறித்தும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதம், சர்வதேச அளவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த விவாதங்களை ஊக்குவிக்க ஒரு தளத்தை வழங்குகிறது.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் தென்படுவோருக்கும், சுற்றுச்சூழல், பரம்பரை அல்லது பிற காரணங்களால் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மாதம் உதவுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, #LungCancerAwarenessMonth என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேன்சர் பரவலில் முக்கியப்பங்காற்றும் செல்களின் திரவம்!