புதுச்சேரி: கரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகளும் இன்று (மார்ச் 14) தொடங்கின. அரசுப்பள்ளி மழலையர் வகுப்பில் ஆர்வத்தோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, அவரது மகன் அசுகோஷை, லாஸ்பேட்டையில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று(மார்ச் 14) சேர்த்தார்.
அவரே பள்ளிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் அளித்து, தனது மகனை மழலையர் வகுப்பில் சேர்த்தார்.
ருத்ர கவுடுவிற்கு குவியும் பாராட்டு
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில், சேர்த்து படிக்க வைக்கின்றனர் எனக் குற்றச்சாட்டு நிலவுகிறது. அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, புதுவை கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, அவரது மகன் அசுகோஷை, லாஸ்பேட்டை கோலக்கார நாயக்கர் அரசுப்பள்ளி முன் மழலையர் வகுப்பில் சேர்த்தார். இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முன் உதாரணமாக, அவரது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ருத்ர கவுடுவிடம் கேட்டபோது, 'அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன'என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நியாயத்துக்கு துணைநின்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு - நாமக்கல்லில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை