முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உத்தராகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாநிலத்தின் 22ஆவது நிர்மாண தினத்தை ஒட்டி அங்கிருந்த எல்லைப் பகுதி மக்களை சந்திக்க இப்பயணத்தை அவர் மேற்கொண்டார்.
அங்கிருந்த மக்களைச் சந்தித்த பிபின் ராவத், மாநிலத்தில் அமைதியான நிலை தொடர்ந்து நீட்டிக்கும் எனவும் மக்கள் அங்கிருந்து வெளியேறத் தேவையில்லை எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், "உத்தராகண்ட் மாநிலம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பல இலக்குகளை அது வெற்றிகரமாக அடைந்துள்ளது. மாநிலத்தில் சுற்றுலாத்துறை ஏற்றம் காண்கிறது.
இங்கிருக்கும் மக்கள் வெளியேறாமல், வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். பாராஹோதி, லடாக் போன்ற இந்திய எல்லைக்குள் சீனர்கள் வந்து பார்த்து செல்வது இயல்பான ஒன்றே. இந்தியர்களும் இதுபோன்ற எல்லைப் பகுதிக்குள் செல்வார்கள். இதை புகாராக எடுத்துக்கொள்வதில்லை.
நமது எல்லையை சீனா அறியும், நாமும் அறிவோம். எனவே இருவருக்கு எல்லைப் பிரச்னை ஏதுமில்லை. பேச்சுவார்த்தை மூலம் அனைத்தையும் சுமுகமாக செயல்படுத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: ஆதாரவற்றவர்களின் வாரிசு: பத்ம விருது மூலம் அயோத்திக்கு பெருமை சேர்த்த ஷெரீப் சாச்சா!