ஹைதராபாத்: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அண்மையில் கைது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவிம் கடந்த பிப்.26-ஆம் தேதி அன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வைத்து சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் முதலில் மார்ச் நான்காம் தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் இரண்டாவது முறையாக ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த மேலும் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுக்கவில்லை ஆனாலும், சிசோடியாவுக்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொமேட்டோவில் கஞ்சா கிடைக்குமா.? டார்ச்சர் கொடுத்த நபர்.! டெல்லி போலீஸ் நச் பதில்.!
இப்படி இந்த வழக்கு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், மதுபான ஊழல் விவகாரத்தில் தெலங்கனா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும்,மேலவை உறுப்பினருமான கவிதாவை நாளை(மார்ச் 9) நேரில் ஆஜராகும்படி டெல்லி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கவிதா, சரத் ரெட்டி ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் சவுத் குழுமத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுக்கு பஞ்சாப் தேர்தலின் போது ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டும் உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.