திருவனந்தபுரம் (கேரளா): கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நாளை(நவ.06) ஆஜராகுமாறு தகவல் கூறப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அளித்த தரவுகளின் அடிப்படையில், ரவீந்திரனுக்கு இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சிவசங்கர் கடந்த வாரம், தங்கக் கடத்தல் வழக்கில் பணமோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணையில், அமலாக்கத்துறை இயக்குநரகம் வேறு சில துறைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.
இந்த ரவீந்திரன் தற்போதைய கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்து வரும் கொடியேறி பாலகிருஷ்ணனின் தனிப்பட்ட ஊழியராக 2006-2011ஆம் ஆண்டில் பணிபுரிந்தவர் என்பதும்; பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தபோது, அரசின் முக்கிய அதிகாரியாக, தலைமைப் பீடத்துக்கு வந்தவர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல்,பெங்களூரு போதைப்பொருட்கள் வழக்கில் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினேஷ் கொடியேறி கைதுசெய்யப்பட்டது, கேரள கம்யூனிஸ்ட் அரசிற்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், 'பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலாளர் ரவீந்திரன், தங்கக்கடத்தல் வழக்கிலும் ஈடுபட்டுள்ளார்' எனப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கேரள மாநில அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விகாஸ் துபேவுடன் நெருக்கம்: காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த அறிக்கை