கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கால்நடைக் கடத்தல் வழக்கில் அனுப்ரதா மொண்டல் மற்றும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் சைகல் ஹொசைன் ஆகியோரின் பங்கு குறித்து அமலாக்க இயக்குநரகத்தின் (ED) துப்பறியும் குழு விசாரிக்கத் தொடங்கியது. அமலாக்கத் துறையின் ஆதாரங்களின்படி, அனுப்ரதா மொண்டல் மற்றும் சைகல் ஹொசன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் டெல்லி துப்பறியும் குழுவினர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர். முன்னதாக மாடு கடத்தல் வழக்கில், மொண்டலின் முன்னாள் மெய்க்காப்பாளரின் கோடிக்கணக்கான சொத்துகளை துப்பறியும் குழுவினர் கண்டுபிடித்தனர். மேலும் புலனாய்வுத்துறையினர் அனுப்ரதா மொண்டலின் பெயரிலும், அவரின் உறவினர்கள் பெயரிலும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பண்ணை வீடுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுதவிர, மொண்டலின் முன்னாள் மெய்க்காப்பாளர் ஹொசைன் மாநில காவல்துறையின் கான்ஸ்டபிளாக இருந்த போது, அவர் பெயரில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், நிதி மோசடி குறித்து விசாரணை அலுவலர்களுக்கு தெரியவந்தது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையினரின் ஆதாரங்களின்படி, துப்பறியும் குழு அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளது. இப்போது அமலாக்கத்துறையினர் அனுப்ரதா மொண்டலையும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளரையும் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச்செல்ல இருக்கின்றனர்.
அமலாக்கத்துறை அலுவலர்கள் மற்றும் சிபிஐ அலுவலர்கள் அவ்வப்போது கலந்து பேசி இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அனுப்ரதா மொண்டல் பிர்பமின் நகரில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த தலைவர். முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 24)அசன்சோல் நீதிமன்றம் அனுப்ரதா மொண்டலின் பெயில் மனுவை தள்ளுபடி செய்து 14 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லாலு பிரசாத் மீதான நில மோசடி வழக்கு - 16 இடங்களில் சிபிஐ ரெய்டு