கொச்சி: கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அன்று இரவே சோதனை முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜியின், சகோதரர் அசோக் குமார் இல்லத்திலும் இரண்டு முறை அமலாகத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அந்த சோதனையில் முடிவிலும் முக்கிய ஆவணங்கள், கோப்புகள் கைப்பற்றப்பட்டு இருந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் 4 முறை அசோக் குமார் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் நான்கு முறையும் அசோக் குமார் ஆஜராகாமல் தலைமறையாக இருந்து வந்தார் இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக் குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு அசோக் குமாரின் மனைவியின் சொத்து விவரங்கள் புதிதாகக் கட்டப்பட்டு வீடுகள் தொடர்பாகச் சோதனை நடத்தப்பட்டு அவரையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
இதையும் படிங்க: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்த நிலையில் தான் தலைமறைவாக இருந்த அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20 பேர் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி அவர்கள் தரப்பின் விளக்கங்களைத் தெரிவித்து இருந்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள அசோக் குமாரை இன்று இரவே சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 1989-இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? - திருநாவுக்கரசர் எம்பி