நாட்டில் பதிவான புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிவரும் நிலையில், வைரஸ் தாக்கத்தால் பல துறைகள் அழிந்து வருகின்றன. தொழில்கள், வேலைகள் மற்றும் வணிகங்கள் வீழ்ச்சியடைவதால், அவர்களைச் சார்ந்திருக்கும் பல குடும்பங்கள் மோசமான துன்பங்களை அனுபவிக்கின்றன.
மிக அண்மைக்காலம் வரை கவுரவமான தொழில்களில் ஈடுபட்டிருந்த பலர், பசியின்மையைச் சமாளிக்க வேறு வழியில்லாமல் குறைவான ஊதியம் அளிக்கும் வேலைகளுக்கு மாற வேண்டியிருந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) ஆத்மா நிர்பர் தொகுப்பு தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.
அந்த நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்து போன நிலையில், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு MSMEகள் இப்போது தங்களது தொழில் மூடப்படுவதை ஒரேத் தீர்வாக கருதுகின்றன. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.13 விழுக்காட்டையும், நகர்ப்புறங்களில் இது 9.78 விழுக்காட்டையும் தாண்டியுள்ளது என, இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அறிக்கைத் தெளிவாக கூறியுள்ளது.
நாட்டில் ஐந்து கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் சில்லறை வணிகத் துறை, மூழ்கும் கப்பலை நினைவூட்டுகிறது. இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த வளர்ச்சி நடவடிக்கைகள் உண்மையிலேயே அதிர்ச்சியூட்டுகின்றன. வணிகம் மிகக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது என்பது மக்களுக்கு ஒரு பெரிய பொருளாதார வரமாக ரிசர்வ் வங்கி கருதியதாகத் தெரிகிறது.
ரூ.12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய MSME துறை, நிதிப் பற்றாக்குறை, பழையக் கடன்களுக்கான வட்டி அதிகரித்தல் மற்றும் அரசாங்க அமைப்புகளிடமிருந்து வரவேண்டிய நிலுவைப் போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளைச் சமாளிக்க முடிந்தால் மட்டுமே சிறு தொழில்கள் பிழைக்க முடியும்.
அமைப்பு சாரா துறையில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர் வாழ்க்கையைக் கடந்த ஆண்டின் ஊரடங்கு சிதைத்தது. இந்த மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒரு பகுதியினர் மிகக் குறைந்த வருமானம் கிடைக்கும் வேலையுடன் சமாளித்தார்கள் என்றாலும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினருடன் பட்டினியோடு, தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர்.
குடிசைத் தொழில்கள் மற்றும் குறுந்தொழில்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அத்தகைய நபர்களின் பட்டியல் நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கை அதற்கு இடமளிக்கவில்லை.
ஆனால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச அரசு செயல்படுத்தியது. படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதன் மூலம் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை அளித்த ஆலோசனை இங்கு நினைவு கூரத்தக்கது.
ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதந்தோறும் ரூ.13,000 உதவித்தொகை அளிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்துவது நாட்டிற்குப் பல வழிகளில் பயனளிக்கும்.
முறையான வாழ்வாதாரம் இல்லாத 80 கோடி பயனாளிகளுக்கு ஐந்து கிலோகிராம் உணவு தானியங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாராட்டத்தக்கது. இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் பசி கொடுமையைத் தணித்து அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் அதே நேரத்தில், அரசாங்கத்தின் செயல் திட்டம் வேலையின்மையைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.