அடுத்தாண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், தேர்தல் தயார் நிலை குறித்து கண்காணிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் மட்ட குழு இரு நாள் பயணமாக சென்னைக்கு செல்லவுள்ளது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா தலைமை வகிக்கும் குழுவில் பிகார் தலைமை தேர்தல் அலுவலர் எச். ஆர். ஸ்ரீநிவாசா, இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் மலாய் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், டிசம்பர் 21ஆம் தேதி சென்னைக்கு சென்று தேர்தல் பணி குறித்து ஆராயவுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வருமான வரித்துறை அலுவலர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் பணி குறித்து கேட்டறியவுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலர்கள், தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர், பல்வேறு துறை செயலாளர்கள் ஆகியோரை பயணத்தின் இரண்டாவது நாளன்று சந்திக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு புதுச்சேரிக்கு செல்லவுள்ளது.