பீமாடோலு : தண்டவாளத்தில் சிக்கி மேற்கொண்டு நகர முடியாமல் நின்ற பொலிரோ வாகனம் மீது டுரோன்டோ விரைவு ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் விபத்துக்குள்ளானது. தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திற்கு டுரோன்டோ விரைவு ரயில் பயணம் மேற்கொண்டது.
அதிகாலை 3 மணி அளவில் டுரோன்டோ விரைவு ரயில், ஆந்திர பிரதேச மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள பிமாடோலு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நின்ற கார் மீது ரயில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச் சென்ற ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் நொருங்கி அப்பளம் போல் உருக்குலைந்தது. விரைவு ரயிலின் முன் பகுதியும் கடும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் ரயில் அருகில் வருவதை கண்டு சரியான நேரத்தில் காரில் பயணித்தவர்களும் வெளியேறி உயிர் பிழைத்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். ரயில் வருவதற்கு முன் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்த நிலையில் அதை முட்டி உடைத்து விட்டு கார் தண்டவாளத்திற்குள் புகுந்ததாகவும், மோதிய வேகத்தில் தண்டவாளத்திற்குள் பாய்ந்த கார் மேற்கொண்டு நகர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உருக்குலைந்து கிடக்கும் காரில் உள்ள நம்பர் பிளேட் மற்றும் ஆவணங்களை கொண்டு, காரின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். மூடப்பட்டு இருக்கும் ரயில்வே கேட்டை உடைப்பது குற்றம் என்பதை சுட்டுக் காட்டி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் ரயில் விபத்துக்குள்ளானதால் மீட்பு பணியில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த விபத்தால் அந்த வழியாக செல்ல இருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ஏறத்தாழ 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனக்டிங் ரயில்களில் செல்ல இருந்த பயணிகள் இந்த விபத்தால் வேறு வழிகளில் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதிகாலை வேளையில் நடந்த கோர ரயில் விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : "ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்ற சுதந்திரம், ஜனநாயக கொள்கையை எதிர்பார்க்கிறோம்" - ஜெர்மனி