டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்த டிசிஜிஐ (இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம்) அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று தற்போது தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
அவை ஜனவரி 16ஆம் தேதிமுதல் மக்களுக்குச் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் மகாத்மா ஜோதிபா புலேவின் பிறந்த நாளான ஏப்ரல் 11ஆம் தேதிமுதல், அம்பேத்கரின் பிறந்த நாளான வரும் 14ஆம் தேதிவரை கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றுவருகிறது.
இதன்படி, முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 27.69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதேபோல் இரண்டாவது நாளில் 40 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மொத்தம் 10 கோடியே 85 லட்சத்து 33 ஆயிரத்து 85 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. அந்தத் தடுப்பூசியின் அறிக்கைகளும் அதற்கான அமைப்புகளிடம் தாக்கல்செய்யப்பட்டிருந்தன.
அதனை மத்திய மருந்துப்பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.சி.ஓ.) வல்லுநர்கள் குழு ஆய்வுசெய்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஏற்று இந்தத் தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளித்தது.
இந்த நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.